தியானத்திற்கு ஓர் அறிமுகம்
தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க உதவும் பயிற்சியாகும். இது ஆன்மீக வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாகக் கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறான வடிவங்களில் இருப்பது புரியவரும்.
தியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும், சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் சேர்த்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்தாலும் தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும் மற்றும் சீராக வைத்திருப்பதும் மட்டுமே.
மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூச்சுப் பயிற்சி என்பது மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக மூச்சுக் காற்றைச் சீர்படுத்தும் பயிற்சி மட்டுமே. சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும் வெளியேறும் மூச்சையும் கவனிப்பது, மனதையும் உடலின் ஆற்றலையும் சமப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சமநிலையில் இருக்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியானம் செய்ய உதவும்.

