வாழ்க்கை

வாழ்க்கையில் முன்னேற வாசிக்கும் பழக்கம் அவசியம்

வாழ்க்கையில் முன்னேற வாசிக்கும் பழக்கம் அவசியம். இணையதளங்கள் பிரபல்யமான பிறகு மக்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து போனது. சில நாளிதழ்கள், மற்றும் வார இதழ்கள் மக்கள் எவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை எழுதாமல் மக்கள் மீது எவற்றையெல்லாம் திணிக்க வேண்டுமோ, அவற்றை எழுதி வெளியிட்டு, மக்களின் அறிவை மங்கச் செய்து, மனதைக் குப்பையாக்கின. அதனால் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதும் ஒரு வகையில் நன்மைதான்.

இதன் மூலம் தேவையற்ற மற்றும் பயனற்ற தகவல்கள் மக்களின் கண்களுக்குப் படாமல் தவிர்க்கலாம். மக்களின் மனதிலும் தகவல் என்ற பெயரில் குப்பைகள் சேராமல் தவிர்க்கலாம். ஆனால் அதே சூழ்நிலையில் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதால், சில முக்கியமான தகவல்களும் நிகழ்வுகளும் பொது மக்களுக்குத் தெரியாமல் போகலாம்.

இணையதளங்கள் அதிகமாக உருவான பிறகு, முழு உலகமும் ஒரு சிறு டப்பாவுக்குள் அடைத்துவிட்டதை போன்று ஆகிவிட்டது. இணையதளங்களில் தேடினால் எந்த விசயத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆனால் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் எவற்றைத் தேடவேண்டும், எவற்றை வாசிக்க வேண்டும், எவற்றை வாசிக்க கூடாது, என்பது மக்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.

நாளிதழ்களோடு நின்ற பொழுது பத்திரிக்கை அலுவலகமோ, அரசாங்கமோ அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு வாய்ப்பிருந்தது. கட்டுப்பாடற்ற இணையம் என்று உருவான பிறகு, எந்த கட்டுப்பாடும் இன்றி யாரும் எதையும், எழுதலாம், வெளியிடலாம், பரப்பலாம், என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இதன் காரணமாக தேவையற்ற மற்றும் பயனற்ற செய்திகள் நம்மை WhatsApp, Telegram, Facebook, மற்றும் பல இணையச் சேவைகளின் மூலமாக வந்தடையத் தொடங்கி விட்டன. நாமும் அவற்றை வாசிக்கப் பழகிவிட்டோம்.

இந்த பழக்கம், நம் மனதில் தேவையற்ற, வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாத பல தகவல்கள் பதிவதற்குக் காரணமாகிவிட்டன. இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், நாம் காணும், மற்றும் வாசிக்கும் ஒவ்வொரு வரியும், வார்த்தையும், நமக்கு தேவையா? பயனுள்ளதா? நமது வாழ்க்கைக்கு உதவுமா? என்பதைச் சிந்தித்து வாசிக்க பழக வேண்டும்.

நல்ல பயனான விசயங்களை மட்டுமே, பார்ப்போம், வாசிப்போம், கற்றுக் கொள்வோம்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *