வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதன் நோக்கம் என்ன?

வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதன் நோக்கம் என்ன? இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பொது மக்களுக்குப் பயனில்லாத எதையுமே செய்யமாட்டார்கள். வழிபாட்டுத் தலங்கள் அமைக்கும் போது கூட அவற்றிலிருந்து மக்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற திட்டம்தான் மேலோங்கி இருக்கும்.

அக்காலத்து வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்தால் நான் சொல்வது தெளிவாகப் புரியும். முந்தைய காலத்து வழிபாட்டுத் தலங்கள் பெரும்பாலும் கருங்கற்கள், சுட்ட செங்கற்கள், மரப்பலகைகள் மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு கட்டப்பட்டவையாக இருக்கும். இவற்றுடன் இன்னும் சில முக்கியமான பொருட்களைக் கலந்து வழிபாட்டுத் தலங்களை அமைப்பார்கள். இயற்கையிலிருந்து இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே, அக்காலத்து வழிபாட்டுத் தலங்கள் பெரும்பாலும் அமைக்கப்பட்டன.

இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய பாறைகளுக்கு பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும் தன்மையும், அவற்றை சேர்த்து வைக்கும் தன்மையும், தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் தன்மையும் இருக்கின்றன. நம் முனிவர்கள் தவம் செய்வதற்காக மலைகளுக்கும், குன்றுகளுக்கும், குகைகளுக்கும் செல்வதற்குக் காரணமாக இருந்தது அங்கு நிறைந்திருக்கும் சக்தி அலைகள்தான். அனைவராலும் மலைகளுக்கும் குகைகளுக்கும் செல்லமுடியாது என்பதால், மலை பாறைகளைக் கொண்டு வழிபட்டு தளங்களை ஊருக்குள் அமைத்தார்கள்.

ஞானமும், படர்ந்த அறிவும், புத்திக் கூர்மையும், சக்தியும், உடைய மனிதர்கள் கோயில்களுக்குச் செல்லும் போது அவர்களின் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய நல்ல அதிர்வுகளையும், அலைகளையும், அந்தக் கோயில் கிரகித்துக் கொள்ளும். பிரச்சனைகளுடைய, வேதனைகளுடைய, நோய்களுடைய, அல்லது சக்தி குறைந்த மனிதர்கள் வழிபட்டு தலங்களுக்கு சென்று. அங்கு அமைதியாக அமர்ந்திருக்கும் போது, அங்கிருக்கும் சக்தி அலைகள் அவர்கள் மீது பரவி, அவர்களின் பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

இவ்வாறு நல்ல ஆற்றல்களை சேமிப்பதற்கும், அவற்றை பரிமாற்றிக் கொள்வதற்கும், ஒரு இடமாகத் தான் அக்காலத்தில் வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்பட்டன. இன்றைய காலத்தில் செயற்கையாக சிமெண்ட், செங்கல், போன்ற பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள், அழகுக்காக அல்லது பக்திக்காக பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய, மனிதர்களுக்கு அவற்றில் இருந்து எந்த பெரிய நன்மையும் விழையாது.

வழிபாட்டு தளங்களில் சமூக கூடங்கள்

அக்காலத்து வழிபாட்டுத்தலங்கள் தெய்வ வழிபாடுகளுக்காக மட்டுமின்றி பல சமூக செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பெரும் நகரங்களில் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள், ஆதரவற்றோர் இல்லமாக, முதியோர் இல்லமாக, பள்ளிக்கூடமாக, மருத்துவமனையாக, பசு காப்பகமாக, கலைக்கூடமாக, பொது மண்டபமாக, அரசனும் மக்களும் கலந்தாலோசிக்கும் இடமாக, மற்றும் பல முக்கிய காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

இன்றைய காலகட்டத்தில் தெய்வ வழிபாடு என்ற ஒரு சிறு வட்டத்துக்குள் வழிபாட்டுத் தலங்களை அடக்கிவிட்டதால் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பல நன்மைகள் வழிபாட்டுத் தளங்களில் இருந்து இன்று கிடைப்பதில்லை. மக்களுக்குள்ளும் நெருக்கம் குறைந்து விரிசல்கள் ஏற்படுகின்றன.