உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்களா? உங்கள் புரிதலில் வாழ்க்கை என்பது என்ன? உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன?
இந்த பூமியில் நீங்கள் பிறந்து வாழ்வதற்கான நோக்கமென்ன? வெந்ததைத் தின்று, கிடைத்ததை அனுபவித்து, முதுமையை அடைந்து, நடை தளர்ந்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பதா வாழ்க்கை? குழந்தையாகப் பிறந்து முதுமையை நோக்கிப் பயணித்து மரணிப்பதா வாழ்க்கை?
வாழ்க்கை என்பது என்ன நேற்றா? இன்றா? நாளையா? வாழ்க்கையைப் பிரிக்க முடியுமா? வகுக்க முடியுமா? பெருக்க முடியுமா? வாழ்க்கை என்பது ஒரு முழுமை… பிறந்த நாளிலிருந்து மரணிக்கும் நாள் வரையில் உள்ள ஒரு முழுமையான கால அளவு தானே வாழ்க்கை?
உடல் என்பது முழுமை, உலகம் என்பது முழுமை, பிரபஞ்சம் என்பது முழுமை, அவற்றைப் போன்று வாழ்க்கை என்பதும் முழுமையல்லவா? வாழ்க்கையைப் பிரித்து வாழ நினைப்பது வேடிக்கையாக உள்ளது. சிறு வயது, இளமை, முதுமை, என்று வாழ்க்கையைப் பிரித்துப் பார்க்க முடியாது, பிரித்துப் பார்க்கவும் கூடாது. வாழ்க்கை ஒரு சக்கரம், நேற்றைய தொடர்ச்சி இன்று, நாளைய தொடக்கம் இன்று அவ்வளவு தான் வாழ்க்கை.
இந்த பூமிக்கு யாரும் தேவையின்றி வருவதில்லை. இந்த பூமியில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு, ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. இந்த பூமியில் மனிதனாகப் பிறந்துவிட்டீர்கள் உங்கள் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து உங்கள் பிறப்பின் நோக்கத்தைக் கண்டறிந்து அது நிறைவேற்றிவிட்டு போங்கள்.