மனிதர்களின் உணவு பழக்கம். மட்டன் பிரியாணி, பெப்பர் சிக்கன், மீன் வறுவல், தந்தூரி சிக்கன், இப்பெயர்களை வாசிக்கும் போது உங்கள் நாவில் எச்சில் ஊறினால் நீங்கள் அசைவம், இல்லையென்றால் நீங்கள் சைவம். நீங்கள் சைவ உணவுகளைச் சாப்பிடுவதற்கும், அசைவ உணவுகளைச் சாப்பிடுவதற்கும், உங்கள் பெற்றோர்கள்தான் காரணம். உங்கள் பெற்றோர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ, அதைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.
இந்தியாவில் யாரும் நாய் மாமிசத்தை உண்பதில்லை ஆனால் வியட்நாம் நாட்டின் பிரதான உணவு நாயின் மாமிசம்தான். ஒரு இந்தியர் வியட்நாம் நாட்டிற்குச் சென்றாலும் அவரை நாயின் மாமிசத்தை உண்ண வைப்பது எளிதான காரியமில்லை, அதைப்போல் ஒரு வியட்நாமியர் இந்தியாவுக்கு வந்தாலும் அவர் நாயின் மாமிசத்தை உண்ணாமல் தடுப்பதும் எளிதான காரியமில்லை. இவை இரண்டுக்கும் காரணம் மனப் பதிவுகள்தான்.
இந்தியர்களின் மனதில் நாய் வளர்ப்புப் பிராணி, செல்லப் பிராணி என்று பதிய வைக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமியரின் மனதில் நாய் ஒரு உணவுப் பொருள் என்று பதியவைக்கப் பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிமை பன்றி மாமிசம் உண்ண வைப்பது நடக்காத காரியம். அதைப்போல் ஒரு சைவரை மாட்டின் மாமிசத்தை உண்ணவைப்பதும், பிராமணரை மாமிசம் உண்ணவைப்பதும் நடக்காத காரியம். எல்லா மனிதர்களின் உணவுப் பழக்கத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் மனதில் பதிந்திருக்கும் பதிவுகள்தான்.
ஆனால் ஒரு சைவரை, பிராமணரை, முஸ்லிமை, இந்தியரை, குழந்தையாக இருக்கும்போது வியட்நாமியக் குடும்பம் தத்தெடுத்து வளர்த்து அவர்களின் உணவு முறைகளை கற்றுத் தந்திருந்தால் அவர்கள் நாயின் மாமிசத்தை உணவாகப் பார்ப்பார்கள். எந்த இனத்தின் குழந்தையும் எந்த இனத்தில் வளர்த்தாலும் வளர்க்கும் குடும்பத்தின் இயல்புகளையும் வாழ்க்கை முறைகளையும் அந்த குழந்தை பின்பற்றத் தொடங்கிவிடும்.
பிறப்பினாலும், வளர்ப்பினாலும், கற்றுத்தரப் பட்டதாலும், ஒரு உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவையும், எளிதில் ஜீரணமாகும் உணவையும், தேவையான சத்துகள் நிறைந்த உணவையும், தேர்ந்தெடுத்து உட்கொண்டால் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழலாம்.