உலக பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது

உலக பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஏற்கனவே இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளின் காரணமாக உலகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

உதாரணமாக ஹாங்காங்கின் பங்குச் சந்தை 15%, ஐரோப்பா 14%, ஜெர்மனி 13%, ஜப்பான் 11%, அமெரிக்கா 11% டும், சரிந்துள்ளன. ஏற்கனவே பல்வேறு காரணங்களால் சரிந்திருந்த இந்திய பங்குச்சந்தை மேலும் ஒரு ஐந்து விழுக்காடு சரிவைச் சந்தித்து, சென்ற ஆண்டின் விலைக்கு பெரும்பாலான பங்குகள் சென்றுவிட்டன.

உலகப் பொருளாதாரத்திலும், அமெரிக்கப் பொருளாதாரத்திலும், இந்தியப் பொருளாதாரத்திலும், எந்த பெரிய மாற்றமும் நடைபெறாததால் பங்குச்சந்தை மேலும் சறியக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் பங்குச் சந்தை மந்த நிலையில் இருக்கக்கூடும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

பங்குச் சந்தையின் இந்த நிலையை ஆங்கிலத்தில் “பிளட் ஆன் தி ஸ்ட்ரீட்” என்று அழைப்பார்கள். அதாவது “தெரு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது” என்ற பொருளில். பங்குச் சந்தை முதலீட்டின் மூலமாக உலகின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறிய வாரன் பஃபெட், பங்குச் சந்தையில் இரத்த ஆறு ஓடும் போதுதான் சிறந்த முதலீட்டாளர்கள் பங்குகளை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவார்.

அதாவது அச்சத்தின் காரணமாக பெரும்பாலான நபர்கள் பங்குகளை விற்பனை செய்யும் போது பங்கின் விலை சரியத் தொடங்கும். பங்கின் விலை சரியத் தொடங்கும் பொழுது, நல்ல சிறந்த நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று அவர் கூறுவார்.

தற்போதைய இந்திய பங்குச் சந்தையின் சூழ்நிலை, புதிதாக பங்குகளை வாங்க விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் கருதுகிறேன். இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, என்று எந்த நாட்டில் பங்கு வாங்க விரும்பினாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சிறிது சிறிதாக, ஒன்று இரண்டு, என்று சிறிய அளவில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு.

தொடக்கத்தில், சிறிய அளவில் ஓரிரு பங்குகளை வாங்கி முதலீடு செய்து, அந்த பங்கின் விலை மேலும் குறையும் போது மேலும் ஓரிரு பங்குகளாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரே நேரத்தில் பல லட்சத்துக்கு வாங்க வேண்டும் அல்லது பெரிய முதலீடாக செய்ய வேண்டும் என்று கருதாமல், உங்களால் இயன்ற அளவுக்கு 50, 100, வெள்ளிக்கோ, டாலருக்கோ, அல்லது 500, 1000 ரூபாய்க்கோ சிறிது சிறிதாக பங்குகளை வாங்க வேண்டும்.

பேராசைப்படாமல், அவசரப்படாமல், பொறுமையாக, நிதானமாக, முதலீடு செய்தால் அனைவரும் பங்குச் சந்தையில் நல்ல லாபத்தை அடையலாம்.

இது ஒரு நிதி ஆலோசனை அல்ல எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். பங்குச் சந்தை மேலும் சரியக்கூடும் அதனால், தைரியம் உள்ளவர்கள் மட்டும் உங்களால் இழக்கக்கூடிய சிறிய தொகையை மட்டும் பங்குச் சந்தையில் சரியான நிறுவனத்தை ஆராய்ந்து முதலீடு செய்யவும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field