குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.
குறளின் உரை
பசியின் அளவைவிட மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.
குறளின் விளக்கம்
திருவள்ளுவர் காலத்தில் சித்த மருத்துவம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டதால், திருவள்ளுவர் சித்த மருத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். மருத்துவர்கள் தவறுசெய்யக் கூடும் என்பதனால் சித்த மருத்துவர்கள் என்று உவமை கூறாமல், முறையாக வகுக்கப்பட்ட சித்த மருத்துவ நூல்களை உவமையாக காட்டுகிறார்.
பசிக்கு மிகுதியாக உண்பது செரிமான மண்டலத்தை சீர் கெடுக்கும். செரிமான மண்டலம் சீர்கேடு அடையும் போது, உண்ட உணவு வயிற்றிலேயே அதிக நேரம் தேங்கிக் கிடக்கும். வெளியில் அதிக நேரம் கிடக்கும் உணவு எப்படி கெட்டுப் போகுமோ, அதைப் போன்றே செரிமானமாகாத உணவும் வயிற்றுக்குள்ளே கெட்டுப்போகத் தொடங்கும். உணவாக நாம் உட்கொண்டவை கழிவாக மாற்றம் அடையும். மேலும், ஜீரணம் முறையாக நடக்காததால் உடலில் சக்தி தட்டுப்பாடும் சோர்வும் உண்டாகும்.
உடலில் சோர்வோ அசதியோ ஏற்படும்போது உடலுக்கு ஓய்வு கொடுக்காமல், அதை அலட்சியம் செய்தாலும். உடலுக்கு இரவில் போதிய உறக்கம் கிடைக்காமலிருந்தாலும். உடல் பலகீனமாகி உடலின் செயல்திறனும் குறையும்.
உடலின் செரிமான திறனும், செயல்திறனும் குறையும்போது, உடலில் சேரும் கழிவுகள் வெளியேற முடியாமல், கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்கத் தொடங்கும். மேலே குறிப்பிட்ட காரணங்களினால் சித்த மருத்துவ நூல்கள் கூறுவதைப் போன்று வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்களை உருவாகின்றன என்கிறார் திருவள்ளுவர்.
பசியின் அளவை அறிந்து அளவாக உண்பதும், உடலுக்கு போதிய ஓய்வு கொடுப்பதும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் பாதுகாக்கும்.