தமிழ் பாரம்பரிய உணவுமுறை. முன்பெல்லாம் நாம் தினசரி உண்ணும் உணவிலிருந்து ஆறு சுவைகளும் நம் உடலுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. நம் முன்னோர்கள் தினசரி உணவில் ஆறு சுவைகளும் இருக்கும்படியாக நமது உணவு முறையை வடிவமைத்தார்கள். இன்றைய மனிதர்கள் நவீன விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில், நம் முன்னோர்களின் அறிவியல் அறிவை கோட்டை விட்டுவிட்டோம். மன இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு, உணவை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு. நம் உடலுக்குத் தேவையான சத்துக்களும், சுவைகளும் முழுமையாக கிடைக்காமல் போயின. உடலின் உள்ளுறுப்புகள் பலவீனம் அடைந்து, பல பாதிப்புகளும், பலவீனங்களும், நோய்களும், உருவாகத் தொடங்கின.
உடல் நலத்தைப் பாதுகாக்க
நம் உடல் இறுதி வரையில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், தெம்பாகவும், இருக்க வேண்டுமென்றால் நம் உணவில் அன்றாடம், இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம், என ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து இயற்கை உணவுகளிலும் ஆறு சுவைகளும் கிடைக்கும், அவற்றை சமைக்காமல் உட்கொண்டால் அல்லது முறையாகவும், சிறிய நெருப்பிலும், பதமாக சமைத்தால், அதன் சுவைகளும் சத்துக்களும் பாதிப்படையாமல் முழுமையாக உடலுக்குக் கிடைத்துவிடும்.
நாம் இன்றைய காலகட்டத்தில் உட்கொள்ளும் உணவுகளில், உவர்ப்பு சுவை கிடைப்பதில்லை என்பதனால்தான் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் ஐந்து சுவைகளும், உணவுக்குப் பின், மெல்லும் வெற்றிலை பாக்கில் ஒரு சுவையும் சேர்ந்து ஆறு சுவைகளும் முழுமை பெறுகின்றன.
செயற்கை உணவுகளையும், பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள். சமையலில் செயற்கை சுவைகளையும், செயற்கைப் பொருட்களையும் தவிர்த்துவிடுங்கள். பழங்களில் மட்டுமே ஆறு சுவைகளும் எந்த சிதைவும் அடையாமல் முழுமையாகக் கிடைக்கும். அதனால் பழங்களை அதிகமாக உண்ணுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பழக்கப்படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.