meditation, mindfulness, reconditioning

மனதின் ஆற்றலும் நினைவாற்றலும்

மனதின் ஆற்றலும் நினைவாற்றலும். மனதின் ஆற்றலை புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருள் வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்றைய சூழ்நிலையில் அந்த பொருள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை, காலப் போக்கில் அதை மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து நீங்கள் ஆசைப்பட்ட பொருள் பரிசாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவோ உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது ஏதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.

இதைப் போன்ற அனுபவங்கள் பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம். பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விசயத்தைக் கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை அடையக்கூடிய சூழ்நிலை அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும்.

மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை, அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு தெளிவாக விளங்குவதில்லை. பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் நபர்கள், அடையத் துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து கொண்டு, அவற்றை அடைவதற்குத் தேவையான முயற்சிகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.

Leave feedback about this

  • Rating