மனம்

மனமும் படைப்பாற்றலும்

மனமும் படைப்பாற்றலும் இணைந்து இயங்குகின்றன. சிந்தனையும், மனதில் தோன்றும் எண்ணங்களும், மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை உருவாக்குகின்றன. மனதில் தோன்றும் விசயங்கள் வெறும் எண்ணம் தானே, சிந்தனை தானே, என்று அலட்சியமாக இருந்து விட முடியாது, அலட்சியமாக இருந்துவிடவும் கூடாது.

நாம் உறங்கும் நேரத்தில் ஒரு கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வெறும் கனவாக இருந்தாலும், கனவு காண்கையில் அது உண்மையாக நடப்பதைப் போன்ற உணர்வு உண்டாகிறது அல்லவா? அது உண்மையாக இருக்குமோ என்று தானே முதலில் அஞ்சுகிறோம்? கனவு காணும் வேளையிலும் பயமும் பதட்டமும் படபடப்பும் உண்டாகத்தானே செய்கிறது? பலருக்குக் கனவுக்கு ஏற்ற வகையில் உடல் படபடப்பதும், நடுங்குவதும், வியர்ப்பதும், இருக்கத்தானே செய்கிறது. மன நிலையில் தோன்றும் கனவுக்கு ஏற்ற வகையில் நம் உடல் செயலாற்றுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

உண்மை இல்லாத வெறும் கற்பனையான கனவுக்கு ஏற்ற வகையில் உடல் பிரதிபலிப்பதைப் போன்று, மனதில் பதிந்திருக்கும் பதிவுகளுக்கும், தோன்றும் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், ஏற்ப உடலில் மாற்றங்கள் உருவாகின்றன. நல்ல எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்றவாறு நல்ல விளைவும், தவறான எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் பதிவுகளுக்கும் ஏற்றவாறு தவறான விளைவுகளும் உருவாகின்றன.

இந்த உதாரணத்தின் மூலமாக மனதில் தோன்றும் எண்ணங்களும் சிந்தனைகளும் அலட்சியம் செய்யக்கூடிய சாதாரண விசயங்கள் அல்ல, அவை ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் தாழ்வையும் உருவாக்கக் கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐம்பொறிகளின் அனுபவங்கள் மூலமாக உருவாகும் மனப்பதிவையும், அந்த பதிவுக்கு ஏற்ற வகையில் உருவாகும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்து திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

சரியான மனப் பதிவும், சிந்தனையும், வாழ்க்கையை நிறைவாகவும் மேன்மையாகவும் வாழ்வதற்கு மிகவும் அவசியமானவை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *