சோ-கு ரேய் சின்னம் (Cho-Ku Rei symbol). ரெய்கி கலையில் பரவலாக பல சின்னங்கள் பயன்படுத்தப் பட்டாலும் சோ-கு ரேய் (Cho-Ku Rei) என்ற சின்னம்தான் அடிப்படை மற்றும் முதல் சின்னமாக கருதப்படுகிறது. மற்ற பிற சின்னங்களைப் பயன்படுத்தும் வேளைகளில் கூட முதலிலும் இறுதியிலும் சோ-கு-ரேய் சின்னத்தைப் பயன்படுத்துவது வழக்கமாகும்.
ரெய்கி கலையில் நிறுவனர் டாக்டர் மிக்காவோ உசுய் அவர்கள் சோ-கு-ரேய் சின்னத்தை மட்டுமே பொதுப் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவருக்குப் பின்னர் வந்த மாஸ்டர்கள், அவர் அவர் தேவைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப பல சின்னங்களை உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர்.
கால ஓட்டத்தில், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுமைக்கும், பல்வேறு கால கட்டத்தில், பல்வேறு நாடுகளில், பல்வேறு மாஸ்டர்கள் பயன்படுத்திய சிம்பல்கள் நமக்கு சுலபமாக அறிமுகமாகின. இணையம் மூலமாக, பல்வேறு சிம்பல்கள் நமக்குக் கிடைப்பதனால், அவை அனைத்துமே ரெய்கி சின்னங்கள் என்றும், ஒவ்வொரு சின்னத்துக்கும் தனிப்பட்ட சிறப்பு ஆற்றல்கள் இருக்கின்றன என்றும் மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.
சோ-கு ரேய் சின்னம் மட்டுமே மிக்காவோ உசுய் அவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மற்ற சின்னங்களை அவர் உருவாக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சோ-கு ரேய் என்ற ஒற்றை சிம்பல் மனிதர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானது. சோ-கு ரேய் என்ற சொல்லை, “பிரபஞ்ச ஆற்றல்களே ஒன்று கூடுங்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.